Author: webadmin
கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2018 தை மாதம் பிறந்த நாளைக் கொண்டாடும் குழந்தைகளின் பிறந்த நாள் விழா 28.01.2018 ஞாயிற்றுக் கிழமை இன்று இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லக்குழந்தைகள் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் குழந்தைகளுக்கு இனிப்பூட்டுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்தியக் கலாநிதி இராமநாதன் கிருஸ்ணலிங்கம் (மாவட்ட வைத்தியசாலை, கிளிநொச்சி) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நெருக்கடியான காலம் தொட்டு எமது குழந்தைகளுக்காக தொடர்ச்சியாக உதவி வரும் மனிதநேயம் நிறுவனத்தினுடைய (கொழும்பு) தலைவர் திருமதி அபிராமி கைலாசபிள்ளை அவர்களும் அவருடைய மகன் திரு. அரவிந்தன், மனிதநேயம், அமெரிக்கா, மற்றும் குருகுகன் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், அமெரிக்கா அவர்களும் இன்று 06.01.2018 எமது இல்லத்திற்கு வருகை தந்து குழந்தைகளையும் இல்லச் செயற்பாடுகளையும் பார்வையிட்டுச் சென்றனர்.
எமது இல்லத்தில் தங்கியிருந்து கிளி/கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று 2017ம் ஆண்டு நடைபெற்ற க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் கலைப் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தியடைந்து (3A) கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலையினையும் தேசிய ரீதியில் 253வது நிலையினையும் பெற்று செல்வன் ச. வில்லரசன் அவர்கள் எமது இல்லத்திற்கும் பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன் தொடர்ந்தும் ஏனைய மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
மேலும் இல்ல மாணவர்களான செல்வன். மொ. கனிஸ்ரன் கிறிஸ்டி அவர்கள் கலைப்பிரிவில் 2B C பெற்று மாவட்டத்தில் 48வது நிலையையும்> செல்வி கோ. ஜெய அர்ச்சனா அவர்கள் விஞ்ஞானப்பிரிவில் B C S> பெற்று மாவட்டத்தில் 42வது நிலையையும் பெற்றுள்ளனர். அத்துடன் செல்வி ச. பாவரசி 3C (கலைப்பிரிவு) செல்வி பி. மேனுசா 2C S (கலைப்பிரிவு) செல்வி கி. யாதவி 3S (வணிகப்பிரிவு) ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இல்லத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களை வாழ்த்தி அவர்தம் முயற்சிக்கு என்றும் தலைசாய்க்கின்றோம்.
துயர் பகிர்கின்றோம்
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தலைவரும் இல்லக் குழந்தைகளின் பாசத்திற்குரிய தந்தையும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருமான உயர்திரு. தி. இராசநாயகம் ஐயா அவர்கள் சிவபதமடைந்த செய்தி கேட்டு ஆறாத் துயரடைகின்றோம்.
கள்ளமில்லா நல்லுள்ளமும் கனிவான நின்பார்வையும்
புன்னகை பூத்த பொன்முகமும் அன்போடு அனைவரையும்
அரவணைக்கும் பண்பையும் உமையிழந்தபோது
இனியாரிடம் நாம் காண்போம்……!
மின்னியது செய்தி
விம்மினோம் -நெடிதுயர்
பின்னியது நெஞ்சில் -கலங்கினோம்
என்னது இது? ஏன் மறைந்தீர்?
எம் பாரினில் உமக்கேற்ற இத்துன்பமோ
யாராலும் ஏற்றிட முடியுமோ?
இறைவனுக்கு உம்மை அழைக்கும் அவசரம் ஏன்?
அன்பரீர் உங்கள் ஆத்மா இளைப்பாற
விண்ணவனைப் பணிகின்றோம் நாம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
பணிப்பாளர்கள், பணியாளர்கள், இல்லக் குழந்தைகள்
எமது இல்லத்தில் தங்கியிருந்து கிளி/புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலத்தில் கல்வி பயின்று 2017ம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த செல்வன் தமிழ்பிரியன் அவர்கள் எமது இல்லத்திற்கு பெருமை சேர்த்துள்ளதுடன் தொடர்ந்தும் ஏனைய மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். இவருக்கு எமது இதயபூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் இவரது முயற்சிக்கு என்றும் தலை சாய்க்கின்றோம். இவருக்கு ஊக்கமளித்த இல்லப் பொறுப்பாளர் கல்வி கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
தலைவர் தி. இராசநாயகம் அவர்கள், பணிப்பாளர்கள், பணியாளர்கள் , இல்லக்குழந்தைகள், மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்
ஜெயந்திநகர், கிளிநொச்சி
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தையிட்டு அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் சிறுவர் மற்றும் முதியோர் கௌரவிப்பு விழா இல்லத்தின் தலைவர் திரு. தி. இராசநாயகம் மற்றும் பதில் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் ஆகியோரின் தலைமையில் இன்று 01.10.2017 நடைபெற்றது. இதன்போது வன்னேரிக்குளம், யோகர்சுவாமிகள் திருவடி நிலைய முதியோர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந் நிகழ்வில் எமது இல்லச் சிறுவர்கள் மற்றும் யோகர்சுவாமிகள் திருவடி நிலைய முதியோர்கள் கௌரவிக்கப்படுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.